×

குமரி பாராளுமன்ற வேட்பாளர் யார்?

நாகர்கோவில், பிப்.24:குமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் குறித்து  தேர்தல் பணிக்குழுவிடம் அறிக்கை பெற்று தேசிய தலைமை அறிவிக்கும் என்று முருகன் கூறினார். நாகர்கோவில் சட்ட மன்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை (25ம் தேதி) கோவைக்கு மோடி வருகிறார். 28ம் தேதி விழுப்புரம் கூட்டத்திற்கு அமித்ஷா வருகிறார். மார்ச் 8, 9 தேதிகளில் தேசிய தலைவர் நட்டா வருகிறார். இம்முறை இரட்டை இலக்கத்தில் சட்டசபைக்குள் நுழைவோம். குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர், சட்டமன்ற வேட்பாளர்கள் குறித்து  தேர்தல் பணிக்குழுவிடம் அறிக்கை பெற்று தேசிய தலைமை அறிவிக்கும். குமரியில் எம்.பி மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் பா.ஜனதா பங்கு பெறுமா என்பதனை தேசிய தலைமை முடிவு செய்யும். 2013,14ம் ஆண்டை விட தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைவாக உள்ளது. சமையல் எரிவாயு மானியம் ரத்தாகவில்லை.

மக்கள் நலத்திட்டங்களில் ஒரு ரூபாய் ஒதுக்கினால், 13 பைசாதான் மக்களை சென்றடைகிறது என மறைந்த ராஜிவ்காந்தியே கூறியிருந்தார். ஆனால், தற்போது வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படுவதால், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு மத்தியஅரசின் மானியம் நேரடியாக, முழுமையாக ெசன்றடைகிறது. மானியம், இலவசம் பா.ஜனதா கொள்கை அல்ல. ஆனால், தமிழகத்தில் இலவசங்களை தந்து பழக்கிவிட்டனர். எனவே படிப்படியாகதான் இலவசங்களை குறைக்க முடியும். புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ காரணம் அவரின் நிர்வாகத் திறமையின்மையே. மற்றபடி பா.ஜனதா கவிழ்க்கவில்லை.  காவிரி இணைப்பிற்கு எடியூரப்பா கூறியது அவரது மாநிலம் சார்ந்த கருத்து. நாங்கள் இணைப்பு வேண்டும் என தமிழக நலன் சார்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக நலனை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம்.மதுரையில் எய்ம்ஸ் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கிவிட்டது. இனி கட்டுமான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ், தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, எஸ்.பி அலுவலக சாலையில் உள்ள மூத்தோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Tags : Kumari ,Parliamentary ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...