சூளகிரி தினசரி சந்தையில் வியாபாரிகளிடம் பிடிஓ நேரில் விசாரணை

சூளகிரி, பிப்.24: சூளகிரி தினசரி சந்தையில், கூடுதல் வாடகை கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வியாபாரிகளிடம் பிடிஓ நேரில் விசாரணை நடத்தினார். சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையை அதிமுகவை சேர்ந்த சரஸ்வதி ராஜாராம் என்பவர் ₹45 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். அவர் தினசரி சந்தையில் உள்ள கடைகள் மற்றும் சந்தைக்கு வெளியில் நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம், அடியாட்களை வைத்து மிரட்டி தினசரி வாடகை தொகையை வாங்கி வந்தார். இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், சில நாட்களுக்கு முன் சூளகிரி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு, வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத் ஆகியோரிடம் சந்தை ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின் முருகன் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்ற கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி மனு மீது விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சூளகிரி பிடிஓ சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், நேற்று சூளகிரி சந்தைக்கு நேரில் சென்று வியாபாரிகளிடம், ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் கூடுதல் வாடகை கேட்டு மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

Related Stories: