×

ஒன்றிய உளவுத் துறை அறிக்கை எதிரொலி அதிமுக பொதுச் செயலாளரை மாற்ற அமித்ஷா அதிரடி திட்டம்: கோவையை சேர்ந்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவாம்

சென்னை: தமிழக தேர்தல் குறித்து ஒன்றிய உளவுத் துறையின் அறிக்கை கவலை அளிக்கும் வகையில் இருப்பதால், அதிமுக பொதுச் செயலாளரை மாற்ற அமித்ஷா அதிரடியில் இறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை அமித்ஷா தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமியும், என்டிஏ தலைமையிலான கூட்டணி என்று அமித்ஷாவும் பொது மேடைகளில் கூறியது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. பாஜ தலைவர்கள் சொல்வதைத் தான் எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தனர். இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தின் தலைவரை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேசியது, அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். அதிமுக- பாஜ கூட்டணி என்று கூறினாலும் இருகட்சி முக்கிய தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தொடரத்தான் செய்கிறது. 60 தொகுதிகளுக்கு மேல் பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜ தலைமை மிரட்டி வந்தது. அதுமட்டுமல்ல, அதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளதோ அந்த தொகுதிகளை கேட்டு அண்ணாமலை ஒருபக்கம் டார்ச்சர் கொடுத்து வந்தார். ஒரு சில தொகுதிகளை கேட்டு வாங்கியதும் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்படியாக பாஜவின் அத்துமீறல் அதிமுகவில் கடைக்கோடி தொண்டர்கள் வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தினாலும், தொண்டர்களை சமாளிக்க முடியாமல் அவர் திணறி வந்தார். இதற்கிடையே, தமிழக தேர்தல் குறித்து ஒன்றிய உளவுத் துறையின் அறிக்கை கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளது. இந்த தகவல் அமித்ஷாவுக்கு சென்றதால் அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தான் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரத்தை குறைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியே 4 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வந்த நிலையில் அமித்ஷா, பாஜ போட்டியிடும் மொடக்குறிச்சி மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். அதன் பின்பு வர அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தி.நகர் உள்ளிட்ட சில தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டும் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார். இதனால் அமித்ஷா அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் அவர் தமிழகத்தில் இந்த முறை பிரசாரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.

மேலும், அதிமுக இந்த தேர்தலில் கடும் சரிவை சந்திக்கும் என்றும் தோல்வி குறித்தும் முக்கியமான அறிக்கையை ஒன்றிய உளவுத் துறை அமித்ஷாவுக்கு கொடுத்துள்ளதால், கடுங் கோபத்தை ஏற்படுத்தியுள்ளாம். இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளரை மாற்றுவதற்கு அவர் முடிவெடுத்து அதற்காக தமிழ்நாட்டில் காய் நகர்த்தி வரும் தகவலும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதற்கான உள்ளடி வேலைகளில் அண்ணாமலையை அமித்ஷா களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை குறி வைத்து அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

அந்த அதிமுக வேட்பாளர்களுடன் அண்ணாமலை திருப்திகரமாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமித்ஷா வசம் கொண்டு வரும் வேலைகளை கன கச்சிதமாக அண்ணாமலை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக பிளான்-ஏ திட்டத்தை மறைமுகமாக அமித்ஷா செயல்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்வி, சில விஷயங்களில் முரண்பட்டு வருவது உள்ளிட்டவைகளால் எடப்பாடி பழனிசாமி மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் இந்த அதிரடி நடவடிக்கையை அமித்ஷா கையில் எடுத்ததும் தெரியவந்துள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை, கோவையை சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்த பணிகளை அமித்ஷா அன்ட் டீம் கன கச்சிதமாக செய்து வருவதாக பாஜ தலைவர்கள் மத்தியில் பேசப்படும் தகவல் அதிமுகவினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கண்டுகொள்ளாத அதிகாரிகள் எடப்பாடி பழனிச்சாமி கவலை
தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை அதிரடியாக தேர்தல் ஆணையம் மாற்றி எடப்பாடி பரிந்துரை செய்தவர்கள் மற்றும் வடமாநில அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமித்தது. ஆனால் புதிதாக நியமனம் செய்த அதிகாரிகள் ஒருவர் கூட, எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லையாம். தற்போது நியமிக்கபட்ட ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டும் முன்னாள் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வருகிறாராம். தேர்தல் முடிந்தவுடன் தன்னை ஒன்றிய அரசின் உயர் பதவியில் நியமிக்க அமித்ஷாவிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறாராம். திமுக அரசு மீண்டும் வந்தவுடன் தன்னை மண்டபம் அல்லது நாகர்கோவில் போக்குவரத்துக்கழகத்துக்கு மாற்றிவிடுவார்கள் என்று அவர் எண்ணுகிறாராம். அவரைத் தவிர மற்ற யாரும் எடப்பாடி பழனி்சாமியை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் எடப்பாடி பழனி்சாமியே உற்சாகம் இழந்து காணப்படுகிறாராம். அதிமுகவினரும் கலக்கத்தில் உள்ளனராம்.

Tags : Union Intelligence Department ,Amit Shah ,AIADMK ,General ,Coimbatore ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஐ-பேக் அலுவலக சோதனை விவகாரம் முதல்வரே...