×

சிவகாசியில் நகராட்சி புதிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? கட்டி முடித்தும் பூட்டி கிடக்கிறது

சிவகாசி, பிப்.24: சிவகாசி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டும் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் சிதிலமடைந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி அலுவலகத்திற்கு காமராஜர் சிலை அருகே ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் நகராட்சி கூட்ட மன்ற அரங்கம், ஆணையாளர் அலுவலகம், பொறியாளர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் சிவகாசி நகராட்சி கட்டிடம்  நகரின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும்  இட நெருக்கடி ஏற்படுவதாக கூறி   ரத்தினம் நகர் பூங்கா அருகில் புதிய கட்டிடம்  கட்டப்பட்டது.    நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2 கோடியும், நகராட்சி இடை நிரப்புதல் மற்றும் இயக்குதல் திட்டத்தில்  ரூ.3 கோடியும் செலவிடப்பட்டது.

 இந்நிலையில் புதிய கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  புதிய நகராட்சி அலுவலகம் திறக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் புதிய கட்டிடம் சேதமடைந்து வருகிறது. சிவகாசி நகராட்சியுடன், திருத்தங்கல் நகராட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சிவகாசி பெரு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தனி அலுவலர் நியமனம் செய்து வார்டுகள் வரையறை செய்யப்படவுள்ளது. சிவகாசி நகராட்சி பெரு நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய கட்டிட அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு