×

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிப்பு விவசாயிகள், மீனவர்கள் பொதுமக்கள் குமுறல்

சாயல்குடி, பிப்.24: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பான திட்டங்கள் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக மாவட்ட மக்கள், வணிகர்கள் கூறுகின்றனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் விவசாயம், கடல் தொழில், பனைமரத்தொழில் மற்றும் புனித ஸ்தலங்கள் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க வில்லை. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் ஆரம்ப கட்ட பணிகள் கூட துவங்காமல் கிடப்பில் கிடக்கிறது. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வரவில்லை. 2017ல் ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்டத்திற்கு 24 திட்டங்களை அறிவித்தார். அதில் தற்போது வரை 10 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைத்து சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் நடக்கவில்லை. முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கு இடையூராக, தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ள முதுகுளத்தூர், கடலாடி வழித்தடத்தில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி துவங்க வில்லை. இதுபோன்று கடந்தாண்டு நடைபெற்ற அரசு மருத்துவகல்லூரி துவக்க விழா நிகழ்ச்சியில் ராமநாதபுரம், திருவாடனை, முதுகுளத்தூர் தொகுதியை சேர்ந்த 543 கிராமங்கள் பயன்படும் வகையில் சாயல்குடி அருகே குதிரைமொழியில் ரூ.675 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை, நன்னீராக்கும் புதிய திட்டம் துவங்கப்படும் அறிவிக்கப்பட்டது. முதுகுளத்தூர், கமுதி பகுதியில் விவசாய பொருட்களை பாதுக்காக்க கூடிய குளிரூட்டும் மையம் அமைக்கப்பட வில்லை. கமுதி, சாயல்குடி, அபிராமம் வாரச்சந்தை அபிவிருத்தி செய்ய வில்லை. அந்த திட்டப் பணிகளை துவங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...