×

சுகப் பிரசவம் அருளும் முத்தாலங்குறிச்சி குணவதியம்மன்

குணவதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 23-4-2026

தாமிரபரணி கரையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வணிகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். தலைப் பிரசவம் பார்க்க தாய் வீட்டில் போதிய வசதியில்லை. இதனால் அந்தப் பெண் மனமுடைந்து போய் விட்டாள். தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வழியில்லையே என்று கணவரும் மனைவியைத் திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் அந்தபெண்ணுக்கு வருத்தம். கோபம் அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண் தாமிரபரணிக்கரை மணலில் மனம்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.

அப்படி, அவள் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்று மணலில் நடந்து வரும்போது மதிய வெயில் தாக்கியது. இதனால் நாக்கு வறண்டு தாகம் எடுத்தது. அவள் மயக்க நிலைக்குச் சென்றாள். நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு பிரசவவலியும் ஏற்பட்டது. “அம்மா என்னைக் காப்பாற்று” என்று அலறினாள். மயங்கிச்சாய்ந்தாள். ஒருவர் வயதான பெண்மணி அந்த பெண்ணை தாங்கினார். ஆற்றங்கரையில் இருந்த ஒரு குடிசைக்குத் தூக்கிச் சென்று அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் அந்த வயதான பெண்மணி, தாய் ஸ்தானத்தில் அமர்ந்து செய்தார்.

கர்ப்பிணி மனைவியை காணவில்லையே என கவலையடைந்தார், வணிகர். பல இடங்களில் மனைவியைத் தேடி அலைந்தார். தாமிரபரணி கரையில் தேடி வந்தார். முத்தாலங்குறிச்சி ஆற்றில் குளித்து விட்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அங்கு வந்த சிறுமி “நீ தேடி வந்தது, அதோ அந்த குடிலில் இருக்கிறது போய் பார்”. என்று கூறினாள். மனதில் சந்தோஷம் அடைந்த வணிகர் அந்த குடிலை நோக்கி ஓடினார். அங்கே அழகான குழந்தையுடன் தன் மனைவியைக் கண்டார். சந்தோஷம் பொங்கியது. குழந்தையை அப்படியே தூக்கி உச்சி முகர்ந்தார். தன்னைப் பிரிந்து வந்த மனைவியை கண்ட சந்தோஷத்தில் அவளிடம் அன்பொழுக நடந்து கொண்டார். கண்ணீர் மல்க நின்ற மனைவி யிடம் “உன்னைக் காப்பாற்றியது யார்?” என்று கேட்டார்.

“நான் மயங்கிய வேளையில் என்னை அரவணைத்து பிடித்தவள் ஒரு வயதான பெண்மணி. நான் வயிற்று வலியால் துடித்த போது என்னை தாய்போல் அணைத்துக் கொண்டாள். எனக்கு குழந்தை பிறக்கும்போது ஏற்பட்ட வலியை போக்கியவளும் அவளே. என் கையில் ஆண் பிள்ளையை தந்து விட்டு. என் முகமலர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவளும் அவளே. ஆகவே, அந்த அன்புத்தாயை நீங்கள் பார்க்க வேண்டும்” என்றாள். மனைவி சொல்வது கணவனுக்கு சரி என்றே பட்டது. எனவே, அந்த மருத்துவச்சி தாயைப் பார்க்க ஆவலாக காத்துக் கிடந்தனர். நிமிடங்கள், மணிக்கணக்கை காட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக சூரியன், அவனது பணியை முடித்துக்கொண்டு மேற்கே சங்கமம் ஆனான்.

இருவரும் மருத்துவம் பார்த்த மருத்துவச்சி வந்துவிட்டால், அவளிடம் சொல்லி விட்டு குழந்தையோடு கிளம்பி விடலாம் எனக் காத்து இருந்தனர். இரவும் வந்தது. ஆனால் யாரும் வரவில்லை. காத்து இருந்து காத்திருந்து அயர்ந்துபோன அவர்கள் குழந்தையுடன் தூங்கி விட்டனர். அப்போது வணிகருக்கு கனவு வந்தது. அதில் சிரித்த முகத்துடன் செவ்வாடை கட்டி ஒரு பெண் வந்தாள். அவள் வணிகரிடம் பேசினார். “நான் தான் குணவதியம்மன். உன் மனைவிக்கு வயதான பெண்ணாக வந்து பேறுகாலம் பார்த்தது நான்தான். அது மட்டுமல்லாமல் சிறுமியாக வந்து உன்னை உன் மனைவி குழந்தையைப் பார்க்க வைத்ததும் நான்தான். நான் இந்த முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கோயில் கட்டு” என்று கூறி மறைந்தார்.

விழித்து எழுந்து பார்த்தார் வணிகர். தன் மனைவிக்கு நல்லபடியாக பேறுகாலம் பார்த்தவள் குணவதியம்மனா என்று வியந்தார். பின் சந்தோஷம் அடைந்து அம்மனை நோக்கி கண்ணீர் மல்க வணங்கி நின்றார். மறுநாள் ஊரில் வந்து விவரம் சொன்னார். தாயாக வந்து பேறுகாலம் பார்த்து, சிறுமியாக வந்து அடையாளம் காட்டி.. நல்ல ஆண்பிள்ளை பெற காரணமானவள் அல்லவா அவள். ஆகவே அவளுக்கு நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன் என்று பெயர் வைத்தனர் ஊர்மக்கள். நல்ல ஆண் பிள்ளை பெற்றெடுக்கக் காரணமாக இருந்த தாயை நல்லாண்பிள்ளை பெற்றவள் என்று அழைத்து மக்கள் மகிழ்ந்தனர். பெண்ணுக்கு பேறுகாலம் பார்த்த குடிலில் வணிகர் தனது சொந்த செலவில் கோயிலைக் கட்டினார். முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் குணவதியம்மன்.

இந்தியாவிலேயே இரண்டு இடத்தில்தான் ஆறுகள் வடக்கில் இருந்து தெற்காக பாய்கிறது. ஒன்று கங்கை மற்றொன்று தாமிரபரணி. இந்த தாமிரபரணி ஆற்றில் நல்லபிள்ளை பெற்ற குணவதியம்மனின் கால் பாதத்தினை தொட்டு வணங்கி விட்டு தாமிரபரணி தாய் வடக்கில் இருந்து தெற்குநோக்கி செல்கிறாள். தாமிரபரணி ஆற்றில் வடமுக ஆற்றில் அம்மன் பாதத்தினை தொடும் அமைப்பில் இந்தக் கோயில் மட்டுமே அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும். எனவே, கேட்ட வரம் தரும் தாயாக குணவதி போற்றப்படுகிறாள். தாமிரபரணி தீர்த்தத்தினை விட்டு படியேறியவுடன் அங்கு காவல் தெய்வமாக சுடலையும் பேச்சியும் உள்ளனர். பின் தெற்கு நோக்கி படிக்கட்டில் ஏறியவுடன் அன்புத் தாய் குணவதியம்மன் நமக்கு காட்சி தருகிறார். நல்ல தாயாக… நல்ல பிள்ளை பெற்றவளாக நம்மை நோக்கி சிரித்த முகத்துடன், கனிவான பார்வையுடனும் காட்சியளிக்கிறார். “உனக்கு என்ன வேண்டும் கேள். நான் தருகிறேன்” என்ற பாசத்துடன் கேட்டபடி உள்ளார். கோயில் முன்பு மூன்று பலிபீடம் உள்ளது. அதனை அடுத்து அம்மனை நோக்கி மகிடாசூரனின் மனைவி வேதாளம் மடி ஏந்தி உயிர் பிச்சை கேட்பது போல் உள்ளது.

கோயிலைச் சுற்றி வந்தால் கிழக்குப் பகுதியில் பைரவர் தனி சன்னதியில் தெற்கு நோக்கி உள்ளார். அருகில் விளக்கு ஏந்திய பெண் உருவம் உள்ளது. அதன் அருகில் மடப்பள்ளி உள்ளது. பின்புறம் ஒற்றைப்பனை மரம் உள்ளது. அதனருகே 1000ம் ஆண்டுகளை கடந்த மிகப் பழமையான வேப்பமரம் உள்ளது. கோயிலைச் சுற்றி வந்தால் மேல் புறம் கிழக்கு நோக்கி சங்கிலி பூதத்தார் தனிச் சந்நதியில் உள்ளார். பெரிய சந்நதியில் உச்சிமாகாளி, சந்தனமாரி, பத்திரகாளி, மாடன், மாடத்தி, பேச்சியம்மாள், கருப்பசாமி ஆகியோர் உள்ளனர். இந்தக் கோயில் திருவிழாவில் மதுகுடம் பொங்குதல் என்ற நிகழ்ச்சி மிகவும் விஷேசமாக நடக்கும். திருவிழாவின் போது முதல் நாள் குடத்தில் வைக்கப்படும் நவதானியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பால் பாதியளவில் ஊற்றப்படும். ஆனால், சூடு பண்ணாமலேயே மறுநாள் இந்த பால்குடத்தில் பொங்கும். இதை “மது குடம் பொங்குதல்” என்று கூறுவார்கள். குடத்தினை சுற்றி பால் நன்றாக பொங்கினால் அந்த ஆண்டு இந்தப் பகுதியில் நல்ல விளைச்சலை அம்மன் தருவார் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கைகால் வலி உள்ளவர்கள் கோயில் திருவிழாவின்போது உருவம் எடுத்து வருவார்கள். இதில் கால் வலி என்றால் கால் உருவமும், கை வலி என்றால் கை உருவமும், உடல் வலி என்றால் உடல் போன்ற உருவமும் எடுத்து வருவார்கள். திருவிழாவின் போது ஆயிரங்கண் பானை எடுப்பவர்களும் உண்டு. இதற்காக மக்கள் விரதம் இருந்து நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள். கோயிலில் புரட்டாசி நவராத்திரி. சித்திரை விஷு மற்றும் கொடை விழா மிக விமரிசையாக நடக்கும். இந்தக் கோயிலில் உள்ள வேப்பமரம் மிகப் பெரியது. சுமார் 1000 வருடங்களைத் தாண்டியதாக கூறப்படுகிறது. இந்த மரத்தின் வாழ்நாளை கணக்கில் கொண்டாலே கோயிலின் பழமை நமக்கு நன்கு தெரியும். சுமார் 7 தலைமுறைக்கு முன்பு இந்த கோயிலை குலதெய்வமாக கொண்டவர்கள். அமெரிக்கா, டெல்லி, மும்பை போய் தங்கிவிட்டார்கள். அவர்களின் முன்னோர்கள் காலமான பின்பு, பிறந்த ஊர் தெரியாமலேயே வாழ்ந்து வந்தனர். இவர்கள் கனவில் அம்மன் போய் தனக்கு கும்பாபிஷேகம் செய்ய வாருங்கள் என அழைத்தாள். இது குறித்துப் புரியாமல் அந்த மக்கள் பிரசன்னத்தில் தங்கள் பூர் வீகம் குறித்து பார்த்தபோது நல்லபிள்ளை பெற்ற குணவதி அம்மன் துலங்கினார். பின் அவர்கள் முத்தாலங்குறிச்சி வந்து அம்மனை வணங்கி கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நல்ல பிள்ளை பெற்றவள் என்பதால் சுகப்பிரசவம் வேண்டும் என்று மக்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும். நின்றுபோன திருமணம், தொழில் விருத்தி, காணாமல்போன பொருள் திரும்பக் கிடைக்க, கை கால் வலி தீர இந்த அம்மனை வணங்கினால் பலன் உண்டு. நல்ல தாய், குணவதி, நல்லையா, நல்ல சிவன் போன்ற பெயர் இருந்தால் அவர்கள் முத்தாலங்குறிச்சி அம்மனோடு தொடர்புகொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் பக்த ஜன சபா மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் 23.04.2026 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குணவதியம்மன் பக்த ஜன சபா செய்துவருகிறது.கோயில் நடை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். திருநெல்வேலி – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் என்ற இடத்தில் இறங்கி 6 கிலோ மீட்டர் தொலைவில் முத்தாலங்குறிச்சியை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. நெல்லை சந்திப்பிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

Tags : Muthalankurichi Gunawathiyamman ,Gunawathiyamman Temple ,Kumbapishekam ,Madurai ,Srivaikundam ,Tamiraparani ,
× RELATED உஜ்ஜயினியின் விவேகி ரோகிலன்