×

பட்ஜெட்டில் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிக்கை

மதுரை, பிப்.24: தமிழ்நாடு தொழில் வர்த்தகசங்கத்தின் தலைவர் ஜெகதீசன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ரூ.41 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறையுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான குறிப்பிடத்தக்க புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு மட்டும் அறிவிப்புகளே இருப்பது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கோவையுடன், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் துவக்குவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், கோவைக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கிட, ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு இத்திட்டம் அறிவிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை திட்டம், அதற்கான பணிகள் நிறைவேற்றுவது குறித்த தகவல்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைப்பதற்குப் பதிலாக, மத்திய அரசை வலியுறுத்துவோம் என பட்ஜெட்டில் கூறி இருப்பது வெறும் கண்துடைப்பு தான்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் தமிழகத்தின் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக கடன் அளவு சுமார் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2021-22ல் ரூ. 5.7 லட்சம் கோடியாக இருக்கும் என்ற நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி தற்போது 4.6 சதவீதமாக குறைந்துள்ளது, படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது’ என்றார்.

Tags : Tamil Nadu Chamber of Commerce and Industry ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...