பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

பழநி, பிப்.24: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த 12ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 16ம் தேதி நடந்தது. கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இரவு 7 மணிக்கு கொடியேற்றத்தையொட்டி மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் குலவை கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி துவங்கும்.மார்ச் 2ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கன்யா லக்னத்தில் திருக்கல்யாணம் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெறும். 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 4ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் நாட்களில் அம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், வெள்ளி யானை, தங்கக் குதிரை, வெள்ளிக்கிடா, வெள்ளி யானை, வெள்ளிக் காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories:

>