×

தனியார் நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி அம்பை, சேரன்மகாதேவியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

அம்பை பிப்.24:   மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துதல், தனியார் நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் மாநிலம் தழுவிய அளவில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒரு வாரம் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் ஆவேசமடைந்த மாற்றுத்திறனாளிகள், அம்பையில் தாலுகா அலுவலகத்தை 2வது முறையாக நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட இணைச்செயலாளர் அகஸ்தியராஜன் தலைமையில்  முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலக வாயிலில் காவல்துறையினர் பேரிகாட் வைத்து தடுப்புகளை அமைத்து அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர், ஏற்கனவே வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவதால் அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் இல்லை எனக்கூறி துணைத் தாசில்தார் பத்மாவதி அவர்களிடம் வெளியில் வைத்து கோரிக்கை மனுவை கொடுக்கும்படி அம்பை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறினார். முதலில் ஏற்க மறுத்த மாற்றுத்திறனாளிகள் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மனு அளித்துச் சென்றனர்.

   போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர்.மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன் போராட்டத்தை துவக்கிவைத்தார். விவசாய சங்கச் செயலாளர் ஜெகதீசன், சுடலைமணி வாழ்த்திப் பேசினர். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட  66 பெண்கள் உள்பட 112 பேரை அம்பை போலீசார் கைது செய்தனர்.வீரவநல்லூரில் 90 பேர் கைது : இதே கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபடும் பொருட்டு சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நேற்று திரண்டு வந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்தில் முன்னதாக அதிக அளவில் குவிந்த போலீசார், சப் கலெக்டர் அலுவலக வாசல் கதவுகளை மூடியதோடு மாற்றுத்திறனாளிகள் உள்ளே செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் ஆவேசமடைந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தலைவர் செல்வசுந்தரி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சங்க இணைச்செயலாளர் அகஸ்தியராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இசக்கிமுத்து, ஆக்னல், மாசானம், மாவட்ட இணைச்செயலாளர் கற்பகம், ஒன்றிய தலைவர் ரவி உள்ளிட்ட 90 பேர் பங்கேற்றனர். இதனால் அம்பை சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தும் ஏற்க மறுத்த மாற்றுத்திறனாளிகள் 90 பேரை போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Tags : Cheranmakhadevi ,Ambai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...