சாலை மறியலில் ஈடுபட்ட 300 சத்துணவு ஊழியர்கள் கைது வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே

வேலூர், பிப்.24: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 300 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் உமாராணி வரவேற்றார்.

இதில் சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ₹5 லட்சம், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது 300க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் எதிரே சர்வீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டபோது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. இதைக்கண்ட போலீசார் சாலையில் இருந்த பேரிகார்டுகளை அகற்றி ஆம்புலன்ஸ்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>