முதியோர் உதவித்தொகை இம்மாதம் கிடைக்குமா? அதிகாரி விளக்கம் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், பிப்.24: வேலூர் மாவட்டத்தில் இந்த மாதம் முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வயது முதிர்வின் காரணமாக உழைத்து சம்பாதித்து வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாமல் சிரமப்படும் முதியோர்கள், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் மாதம் ₹500 வழங்கப்பட்ட இந்த உதவி தொகையை 2011ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ₹1000 ஆக உயர்த்தி வழங்கினார். இந்த திட்டம் ஆதரவற்ற பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. மகன்கள், மகள்கள் இருந்தும் ஆதரவற்று இருக்கும் முதியோர்கள் மாதம் ₹1000 உதவி தொகை மூலம் தங்களது தேவைகளை சமாளித்து வருகின்றனர்.மணியார்டர் மூலம் அனுப்புவதால் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் முதியோர் உதவி தொகையை வங்கியில் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு இந்த நிதி உதவி குடும்பம் நடத்த மிகவும் உதவியாக உள்ளது. அரசின் உதவித்தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் போடப்பட்டு வருகிறது. இதனால் பல முதியவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை இன்னும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. மாதந்தோறும் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் அந்தந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த மாதம் இன்னும் வராததாதல் அவர்கள் அவதி அடைந்துள்ளனர்.இதுகுறித்து வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமராஜ் கூறுகையில், ‘ வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றுவிட்டது. அதனால் முதியோர் உதவிதொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரசிடம் தெரிவித்து நிதி பெறப்பட்டுள்ளது.

அணைக்கட்டு தாலுகாவில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வேலூர், காட்பாடி தாலுகாகவில் இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதற்கான பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் இந்த மாத்திற்கான உதவித்தொகை கிடைத்துவிடும்’ என்றார்.

Related Stories:

>