முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் எமரால்டு அணை

ஊட்டி, பிப். 24: ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையின் முழுமையாக நிரம்பியுள்ளதால் இம்முறை மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சமவெளி பகுதிகளுக்கும் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இதுதவிர இந்த அணைகளில் உள்ள நீர் குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இம்முறை தென்மேற்கு பருவமழை, கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் துவங்கி 2 மாதங்கள் பெய்தது. இம்மழையால் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள், குடிநீர் ஆதாரங்கள் உள்ளிட்டவைகள் முழுமையாக நிரம்பின.

 இதேபோல் வடகிழக்கு பருவமழையும் தீவிரம் காட்டியது. இதனால் மின் உற்பத்தி ஆதாரமாக விளங்கும் அப்பர்பவானி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பிய நிலையில் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இதனிடையே ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் உள்ளிட்ட மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அணையும் மழை காரணமாக முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் மின் உற்பத்தி பணிகள் தொய்வின்றி நடை பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>