×

தேர்தல் பணியில் ஈடுபடும் 725 போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

*வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணி தீவிரம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் 725 போலீசாருக்கு, சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம் மற்றும் பரமத்திவேலூர் என 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேருக்கு, நேற்று 3ம் கட்ட பயிற்சி வகுப்பு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை தயார்படுத்துதல், பொதுமக்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அங்கு இடம் பெற வேண்டிய ஆவணங்கள், வேட்பாளர்களின் விபரங்கள் போன்றவை ஒட்டும் பணி நேற்று துவங்கியது.

இதனிடையே, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி விமலா, தேர்தல் பொது பார்வையாளர்கள் அன்கித்குமார் அகர்வால், மனோஜ் புஷ்ப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ், தேர்தல் காவல் மயூர் குலாப்ராவ் பாட்டீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள 725 போலீசார், கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 119 போலீசார், சேந்தமங்கலம் தொகுதியில் 139 போலீசார், நாமக்கல் தொகுதியில் 140 போலீசார், பரமத்திவேலூர் தொகுதியில் 130 போலீசார், திருச்செங்கோடு தொகுதியில் 121 போலீசார், குமாரபாளையம் தொகுதியில் 76 போலீசார் என மொத்தம் 68 சிறப்பு எஸ்ஐக்கள், 508 ஏட்டுகள், 149 காவலர்கள் என மொத்தம் 725 போலீசாருக்கு முதற்கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் 70 நுண்பார்வையாளர்களுக்கு, இரண்டாம் கட்டமாக கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சியும், நேற்று கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் அளிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal ,Tamil Nadu ,
× RELATED ஏப்.23 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க...