×

ஐபிஎல் தொடரில் இணைந்த இலங்கை வீரர் ஷனாகாவுக்கு ஓராண்டு தடை விதித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் 2026 தொடருக்காகப் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) ஒப்பந்தத்தைப் புறக்கணித்த இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனகாவுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓராண்டு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

லாகூர் கலாந்தர்ஸ் அணியுடன் முறையாக ஒப்பந்தம் செய்திருந்த ஷனகா, அந்தத் தொடரில் விளையாடுவதற்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய முடிவு செய்தார். வீரர்களுக்கான நடத்தை விதிகளை மீறி, ஒப்பந்தத்தில் இருக்கும்போது மற்றொரு தொடருக்கு முன்னுரிமை அளித்த காரணத்திற்காக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசிபி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையின் காரணமாக, தசுன் ஷனகா வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளார். முன்னதாக, ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி இதே போன்ற காரணத்திற்காக இரண்டு சீசன்களுக்குத் தடை செய்யப்பட்டதே பிசிபி வழங்கிய கடுமையான தண்டனையாகக் கருதப்பட்டது. ஆனால், ஷனகா தனது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதால், அவரது தண்டனை காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாகப் பாகிஸ்தான் வாரியம் குறைத்துள்ளது.

தனது மன்னிப்புக் கடிதத்தில், பாகிஸ்தான் மக்கள், ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் வருத்தம் தெரிவித்துள்ள ஷனகா, பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகும்போது வேறு எந்த அணியிலும் சேரும் எண்ணம் தமக்கு இருக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pakistan Cricket Board ,Shanaka ,IPL series ,Dasun Shanaka ,Pakistan ,Super League ,PSL ,IPL 2026 series ,PCB ,Lahore Kalanders ,
× RELATED இலங்கை மகளிருடன் முதல் ஓடிஐ வங்கதேசம் அபார வெற்றி