பெரணமல்லூர் அருகே மயான பாதையை தாசில்தார் ஆய்வு

பெரணமல்லூர், பிப்.23: பெரணமல்லூர் அருகே பொதுமக்கள் மயான பாதை வேண்டி கலெக்டரிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார். பெரணமல்லூர் அடுத்த மேலானூர், மதுரா, ஆவியந்தாங்கல் பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாராவது வயோதிகம் காரணமாகவோ, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால் மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைப்பது வழக்கம். ஆனால் மயானத்துக்கு செல்லும் பாதை உரிய வசதி இன்றி வயல் வெளியில் இறங்கி செல்லும் அவல நிலையில் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவியந்தாங்கல் பகுதிக்கு வந்த கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் பொதுமக்கள் மயானபாதை வசதி குறித்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கலெக்டர் அங்கிருந்த தாசில்தாரிடம் பாதையை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து தாசில்தார் பூங்காவனம், பெரணமல்லூர் பிடிஓ ராஜன்பாபு பொதுமக்களுடன் மயானபாதை செல்லும் வழியினை ஆய்வு செய்தனர்.

இதில் மயானத்திற்கு தனியார் நிலத்தின் வழியே செல்லும் நிலையை பொதுமக்கள் தாசில்தாரிடம் விளக்கிக் கூறினர். அப்போது தாசில்தார் பொதுமக்களிடம் நீங்கள் நில உரிமையாளரிடம் மயான பாதைக்கு உரிய இடத்தினை அரசிடம் ஒப்படைக்க சம்மதம் கேட்டு வாருங்கள். மாவட்ட நிர்வாகம் மூலம் மயானத்திற்கு செல்லும் பாதை வசதியை செய்து தருகிறோம் என அவர்களிடம் உறுதி அளித்தார். அப்போது மண்டல துணை தாசில்தார் கோமதி ஊராட்சி தலைவர் சித்ரா, விஏஓ கமலதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>