×

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்கள் நிச்சயமாக பாதிக்கும்: பாஜ கூட்டணியில் உள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கோவை தொழில் முனைவோர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். இதில் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெம்மாசணி சந்திரசேகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: எனது பிறந்தநாளில் தமிழ்நாட்டில் இருப்பது பெரும் சந்தோஷம். வாஜ்பாய் காலத்தின் போது நானும் பொறுப்பிலிருந்து 1991ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. 1971ன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினேன். அப்படி செய்ததால் எந்த தொகுதிகளும் பாதிப்படையவில்லை. இப்போது 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. பிரதமர் தொகுதி மறுவரையறைக்கு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளார். அதில் பெரிய மாநிலமாக இருந்தாலும், சிறிய மாநிலமாக இருந்தாலும் 50 சதவீதம் உயரும் என தெரிவித்துள்ளார். இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர். இதனால் தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கினால் நிச்சயம் தென்னிந்திய தொகுதிகளின் எண்ணிக்கை உறுதியாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. டபுள் என்ஜின் அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை இணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் காவிரிக்கும் நீர் வழங்கும் வாய்ப்பு உருவாகும். கங்கா, காவிரி இணைப்பு மோடி ஆட்சி தொடரும் பட்சத்தில் நடக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து அரசுகளும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* நாயுடு சமுதாய மக்களிடம் வாக்கு கேட்ட சந்திரபாபு
தமிழ்நாட்டில், ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் கோவையில் வசிக்கும் நாயுடு சமுதாய மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடம் பாஜ., அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கோவையில் மட்டும் அவரது சமுதாய மக்களை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டி உள்ளார். மதவாத அரசியல் செய்து வரும் பாஜ, தற்போது சாதி அரசியலிலும் இறங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,BJP ,Coimbatore ,National Democratic Alliance Party ,Avinashi Road… ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...