சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு தொகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கொளத்தூரில் இன்று மாலை பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அங்கேயே தனது அனல் பறக்கும் பிரசாரத்தையும் நிறைவு செய்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 6 கட்டங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடைசியாக நேற்று முன்தினம் ஓசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல்வர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள தொடங்கினார். அதாவது நேற்று முன்தினம் இரவு அவர் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ரோடு ஷோவிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று காலையில் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அண்ணா நகர் டவர் பூங்கா பகுதியில் இருந்து வேட்பாளருடன் நடக்க தொடங்கி அந்த பகுதி மக்களிடமும், பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பூங்காவில் இருந்தவர்கள் முதல்வருடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சென்னை மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் பொதுமக்கள் வெள்ளத்தின் நடுவே நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.
மு.க.ஸ்டாலினை வரவேற்க வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து மலர் தூவியும் உதயசூரியன் பதாகைகளை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர். கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கை அசைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜாவை ஆதரித்து அந்த பகுதியில் வியாபாரிகள், மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். நடந்து சென்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிறகு நேற்று மாலையில் திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகில் பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அவருடன் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவால் எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மஸ்ஜித், தட்டான்குளம் சூளையிலும், யானைகவுனி மேம்பாலம் அருகிலும் பிரசாரம் செய்தார். தொடர்ந்து துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து வால்டாக்ஸ் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுபேர்கானை ஆதரித்து பேசின் பிரிட்ஜ் சந்திப்பிலும், சென்னை-ஸ்ரீகாகுளம் நெடுஞ்சாலையிலும் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து சத்தியமூர்த்தி நகர் பாலம், வியாசர்பாடி அசோக்பில்லர், டிவிகே லிங்க் ரோடு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 3 மணி வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, மேடவாக்கம் டேங்க் ரோடு, சோமசுந்தரம் 6வது தெரு, நெட்ட முத்தியால்கான் தெரு (என்.எம்.கே.தெரு), பட்டாச்சாரி தெரு, பரசுராம ஈஸ்வரன் கோயில் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை, ஐ.சி.எப். சிக்னல் அருகிலும் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மேயர் சிட்டிபாபு பாலம், ஜம்புலிங்கம் மெயின் ரோடு, சிவஇளங்கோ ரோடு, பெரவள்ளூர் காவல் நிலையம், ஜவஹர் நகர் மெயின் ரோடு, சுந்தரராஜ பெருமாள் கோயில் தெருவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதி பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கேயே தனது பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 3 நாட்கள் சென்னையை முற்றுகையிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுவது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
* ‘நல்லாட்சியின் தாக்கத்தை பெரிதும் பாராட்டுகிறேன்’
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளோம். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அவரது அர்ப்பணிப்புமிக்க நல்லாட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
* தொகுதி மறுவரையறையில் பாஜ அரசுக்கு பலத்த அடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.கே.சேகர் பாபுவை ஆதரித்து யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘பாஜ அரசு தொகுதி வரையறை மசோதாவை கொண்டு வந்தது, அந்த மசோதா நிறைவேறாமல் போனது. அவர்களுடைய எம்பிக்களே அவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த விவகாரத்தில் பாஜ அரசு பலத்த அடி வாங்கியது. தமிழ்நாட்டின் திட்டங்களை ஒன்றிய பாஜ அரசு முடக்கி வருகிறது. இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடைபெறும் தேர்தல்’’ என்றார். தொடர்ந்து பேசின் பிரிட்ஜ், மூலக்கொத்தளம் சந்திப்பில் ராயபுரம் வேட்பாளர் டாக்டர் சுபேர் கானை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
