×

அதிமுக ஆட்சி ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை வேலூர் ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ நந்தகுமார் பேச்சு

வேலூர், பிப்.23: திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் ேநற்று நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, எம்பி கதிர்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி வரவேற்றார்.

அப்ேபாது ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ பேசுகையில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைத்தால் வேலூருக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். எனவே அதை ஏற்று நாங்கள் பேனர் வைக்கவில்லை. ஆனால் முதல்வர் வருகையொட்டி கோர்ட் உத்தரவை மீறி அதிமுகவினர் அடிக்கு அடி பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்திருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதிமுக ஆட்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதி. மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளார்’ என்றார்.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் கிரேன் உதவியுடன் கார் ஒன்றை அந்தரத்தில் தொங்கவிட்டும், மற்றொருபுறம் டூவீலர்கள் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், முன்னாள் எம்எல்ஏக்கள் ஞானசேகரன், நீலகண்டன், ஒன்றிய திமுக செயலாளர்கள் பாபு, சி.எல்.ஞானசேகரன், பகுதி செயலாளர்கள் சுனில்குமார், வன்னியராஜா, தங்கதுரை மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணா சாலையில் எதிர் திசையில் வந்த ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடும்படி எம்எல்ஏ நந்தகுமார் தெரிவித்தார்.

Tags : MLA ,Nandakumar ,Vallur ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...