விருத்தாசலத்தில் பரபரப்பு சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்

விருத்தாசலம், பிப். 23: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பூவராகன் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் வெளியே செல்லமுடியாமல் தெருவிலேயே தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பாண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வரும் நபரை கண்டித்ததோடு, உரிய ஆவணத்துடன் இடத்தை அளவீடு செய்த பின்பு கட்டிடம் கட்ட வேண்டும். அதுவரை கட்டிடத்தை கட்ட கூடாது என்று தடுத்து நிறுத்தினர். மேலும் இதற்கான தீர்வு உடனடியாக எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன்பேரில்  பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>