ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா

திருச்சி, பிப்.23: ரங்கம் ரெங்கநாதர் கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி இன்றுடன் (23ம் தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளினார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 9ம்-நாளான இன்று (23ம் தேதி) பந்தக்காட்சியுடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோயில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

More