போலி ஆவணங்கள் மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.30 லட்சம் கையாடல் நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மறியல்

பாபநாசம்,பிப். 23: போலி ஆவணங்கள் மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.30 லட்சம் கையாடல் நடந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் அருகே பெருமாக்க நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் விவசாய நிலமே இல்லாதவர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களை பெற்று மெலட்டூர் இரண்டாம் சேத்தி, காட்டுக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிட்டா அடங்கல், பட்டா மூலம் விவசாய பயிர் கடன் மற்றும் நகை கடனாக மொத்தம் 25 பெயர்களில் கூட்டாக கையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த நெடாரில் கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்திற்கு காவலூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.

இதில் விவசாய சங்கம் புண்ணிய மூர்த்தி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதித்தது. விவசாயிகள் கூறுகையில், டெல்டா பகுதிக்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியை விட முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திற்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அதிகம். கூட்டுறவு கடன் சங்கங்களில் தலைவர்களாக பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே தலைவர்களாக உள்ளனர். இதனால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த சங்கத்தில் இந்த வருடம் ரூ.30 லட்சம் வரை கையாடல் நடந்திருக்கலாம். கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 நபர்கள் மீதான கடன் தள்ளுபடியை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என்றனர்.

Related Stories:

>