×

தஞ்சையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.23: மத்திய பாஜக அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, தஞ்சை எம்எல்ஏ., நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், நாகராஜன், சட்டத்திருத்த குழு உறுப்பினர் இறைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா பேசும்போது, இன்று நாடு முழுவதும் சாதாரணமாக மக்கள் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே பல்வேறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்தில் உள்ள மக்கள் தற்போது சமையல் எரிவாயு விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி முதல் அனைத்து உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு உயரும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத எடப்பாடி அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டு வருகிறது. மாநில அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி யை தர மறுத்து வரும் மத்திய அரசை கண்டிக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. மாநில அரசுகளின் லட்சக்கணக்கான ஜிஎஸ்டி வரி சுரண்டப்படுகிறது. கலைஞர் இருந்திருந்தால் இதை உடனடியாக தட்டி கேட்டு இருப்பார். ஆனால் மாநில உரிமைகளை பறிக்கொடுத்து வரும் எடப்பாடி அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். விரைவில் அதற்கான தண்டனையை தமிழக மக்கள் வழங்குவார்கள். தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கும் காலம் விரைவில் நிறைவேற போகிறது என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி, தண்டபாணி, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Thanjavur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி