×

விஜய்க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டில் பாஜ வலிமை பெற வாய்ப்பாக அமையும்: திருமாவளவன் பேச்சு

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: எந்தத் தெளிவும் இல்லாமல் விஜய் இருக்கிறார். பாஜவை கொள்கை எதிரி என்கிறார், ஆனால் பாஜவை பற்றி வாய் திறப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமா ரசிகத் தன்மை என்பது அரசியலில் ஊடுருவி இருக்கிறது, மேலோங்கி இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சினிமா வேறு, அரசியல் வேறு என்று பிரித்துப் பார்க்கும் நிலை இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பாஜ கட்டுப்பாட்டில் இருக்கிற நிலையில், அவரால் பாஜவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை, விமர்சிக்க முடியவில்லை, எந்த நிலைப்பாட்டையும் துணிச்சலாக எடுக்க முடியவில்லை. அதிமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜவிற்கு போடும் ஓட்டு என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாடு உத்தரபிரதேசமாக, பீகாராக மாற வேண்டுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அதேபோல் விசில் அடிப்பவர்களுக்கும் போட்டு விடாதீர்கள். விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்.

ஏனென்றால் அதிமுக – பாஜ கூட்டணிக்கு அவர் இலகுவாக பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறார். விஜய் கட்சி தொடங்கியிருப்பதும், பிரசாரம் செய்வதும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். மாற்றம் வேண்டும் என்று கருதி நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும், விஜய்க்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜ இங்கே வலிமை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்கிற மிகப்பெரிய ஆபத்தாக அது போய் முடியும், தீங்காகப் போய் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijay ,BJP ,Tamil Nadu ,Thirumavalavan ,Chennai ,Marxist Communist Party ,L. Sundararaj ,Thiruvottriyur ,Secular Progressive Alliance ,Viduthalai Siruthaigal Party ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...