புரவி புயல், வடகிழக்கு பருவ மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.50 கோடி நிவாரணம்

புதுக்கோட்டை, பிப்.23: புதுக்கோட்டை மாவட்டத்தில் புரவி மற்றும் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் வீசிய புரவி புயல் மற்றும் பருவம் தவறி பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பாதிப்பிற்குள்ளானது. இதனை மத்தியக் குழு ஆய்வுக்குப் பின்னர் தற்பொழுது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 3.12.2020ல் வீசிய புரவி புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 1,388 எக்டர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புரவி புயலில் நெல் மற்றும் இதர பயிர்கள் உள்ளிட்ட பாதிப்பு அடைந்த 1,388 எக்டர் பரப்பளவிற்கு 2,386 பயனாளிகளுக்கு ரூ.2.72 கோடி புரவி புயல் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பருவம் தவறி பெய்த வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய ஆய்வுக் குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. மாவட்ட நிர்வாகத்தின் துரித பணியினால் குறிப்பிட்ட காலத்திற்குள் கிராம அளவில், பாதிக்கப்பட்ட பரப்பு மற்றும் விவசாயிகளுடைய அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு நிவாரணம் கோரி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பருவம் தவறிய வடகிழக்குப் பருவ மழை பாதிப்பைப் பொறுத்தவரை 43,976 எக்டர் நெல் மற்றும் மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட இதர பயிர்கள் சேதம் அடைந்து பாதிப்பிற்குள்ளான 89,503 பயனாளிகளுக்கு ரூ.87.73 கோடிநிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. தற்பொழுது அரசின் ஒப்புதலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புரவி மற்றும் வடகிழக்குப் பருவ மழையில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் சம்மந்தப்பட்ட விவசாயிகளுடைய வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு கட்டமாக மொத்தம் ரூ.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு ஓரிரு நாட்களில் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கினை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>