×

பயிர்க்கடன் தராமல் அலைக்கழிப்பு கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை அலுவலர்களை உள்ளே விடாமல் போராட்டம்

பாடாலூர்,பிப்.23: ஆலத்தூர் தாலுகா இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்றவர்களுக்கு பணம் தராமல் அலைக்கழிப்பதாக கூறி அலுவலர்களை உள்ளே விடாமல் வாசலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த விவசாய கடன்களில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ளவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாய கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெறப்பட்ட நிலையில், கடன் வழங்க நிதி இல்லை என்று கூறி கடன் பணத்தை பட்டுவாடா செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர். இதேபோல் ஆலத்தூர் தாலுகா இரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இரூர், பாடாலூர், திருவிளக்குறிச்சி, ஆலத்தூர், நாரணமங்கலம், மருதடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சங்கத்தை சேர்ந்த 79 விவசாயிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது அந்தப் பயிர் கடனில் ஒவ்வொரு விவசாயிக்கும் பாதி தொகைக்கு உரமாகவும் மீதி பாதி தொகை பணமாகவும் வழங்கப்படும். இந்த 79 விவசாயிகள் உரத்தை எடுத்து சென்றுவிட்டனர். மீதித் தொகையை கடந்த ஒரு மாதமாக வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறியும், பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிடடனர். அலுவலர்கள் யாரையும் விடாமல் வாசலை மறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத் துறை கள அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து இன்னும் ஒரு வாரத்தில் பணம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Wave Co-operative Bank ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...