×

2 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரம் மணிப்பூரில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை: போலீசார் மீது கல் வீசி தாக்குதல்

இம்பால்: மணிப்பூரில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மணிப்பூரில் தற்போது மெய்டீஸ் இனத்தை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 7ம் தேதி மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுவனும், அவரது சகோதரியும்(6 மாத குழந்தை) கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அன்றைய தினமே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது 2 எண்ணெய் டேங்கர்கள், சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும் டயர்களை எரித்தும், தற்காலிக காவல் சாவடிகளை சூறையாடியும் கண்டனங்களை பதிவு செய்தனர். அப்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

தொடர் போராட்டத்தால் அசாதாரண சூழல் காரணமாக இணையசேவை முடக்கப்பட்டு, முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சிங்ஜமே என்ற இடத்தில் திரண்ட பொதுமக்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் பேரணி சென்றவர்களை தடுத்த பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பி போகும்படி அறிவுறுத்தினர். இதை ஏற்காத இளைஞர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர். இந்த மோதல்களில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட சிலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

Tags : Manipur ,Imphal ,BJP ,Yumnam Khemchand Singh ,Meadee ,Bishnupur district ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த...