திருச்சி மாவட்டம், லால்குடியில் அதிமுக சார்பில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் போட்டியிடுகிறார். லீமா ரோஸ் லால்குடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்யும் போது கோவை மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து வந்த அவருடைய ஆதரவாளர்கள் மக்களிடம் நைசாக பேச்சு கொடுத்து பரிசு பொருட்கள் அல்லது பணம் வேண்டுமா? எனக்கேட்டு வருகின்றனர். தற்போது பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதால், பரிசு பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அதிமுகவினர் தவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ‘சி’ அளவில் பணத்தை லால்குடி பகுதியில் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் லால்குடியிக்கு நேற்று கருப்பு பையுடன் வந்தனர். தொடர்ந்து, லால்குடி மாந்துறை பகுதியில் உள்ள அதிமுக கட்சி ஆபீசுக்கு ஆட்டோக்களில் சென்றனர். அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டோக்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர், பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். பின்னர், அவர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் கொண்டு வந்த பேக்கில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள்கூறுகையில்,‘‘ லால்குடியில் போட்டியிடும் லீமா ரோஸ், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதற்காக தொகுதியில் சர்வே எடுத்துள்ளார். இதில், அவருக்கு பின்னடைவு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பணம் கொடுத்து வாக்குகளை அள்ளி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். தொடர்ந்து, ஓட்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கும் பணிகளை ரகசியமாக செய்து வருகிறார்,’’என்றனர்.
