ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பாஜ மாநில துணை தலைவர் நடிகை குஷ்பு நேற்று மஞ்சூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக பாஜ மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் சார்பில் குஷ்புவிற்கு மஞ்சூர் பஜாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறிய நடிகை குஷ்பு, வேட்பாளர் போஜராஜன் இல்லாததை கண்டு அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் கேட்டார். அவர்கள் ஏதோ பதில் கூறவே டென்ஷன் ஆன குஷ்பு வேட்பாளர் இல்லாமல் தன்னை எதற்காக அழைத்தீர்கள் என கடிந்து கொண்டார். வேறுவழியின்றி வேட்பாளர் போஜராஜன் இல்லாமலே பொதுமக்கள் மத்தியில் பேசி பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு பின் காரில் ஏறிய குஷ்பு மேல் பஜாருக்கு சென்றார். அங்குள்ள பாஜ தேர்தல் அலுவலகத்திற்கு செல்வதாக நினைத்து பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் பாஜ அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அருகில் இருந்த தங்களது அலுவலகத்திற்கு வராமல் அதிமுக அலுவலகத்திற்கு குஷ்பு சென்றதால் பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
* ஹெலிகாப்டரில் சோதனை
குஷ்பு பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்று காலை 9 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் தளத்திற்கு வந்தார். தொடர்ந்து அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய குஷ்புவின், பேக்குகளை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ரொக்கமோ அல்லது பரிசு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.இதையடுத்து நடிகை குஷ்பு கார் மூலம் அங்கிருந்து மஞ்சூர் பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
