×

கருப்பு கொடி போராட்டம் வெறும் டிரெயிலர்தான்: மெயின் பிக்சரை பார்க்க டெல்லி ஆசைப்படக் கூடாது; இப்போது நடப்பது தமிழகத்தின் அரசியல் உரிமைக்கான போர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

* தொகுதி மறுசீரமைப்புக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள்
* தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம்

நாமக்கல்: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடந்த கருப்பு கொடி போராட்டம் வெறும் டிரெயிலர்தான்; மெயின் பிக்சரை பார்க்க டெல்லி ஆசைப்படக் கூடாது. இப்போது நடப்பது தமிழ்நாட்டின் அரசியல் உரிமைக்கான போர். டெல்லியின் ரிமோட் கண்டரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள். தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேசி உள்ளார். நாமக்கல்லில் நேற்று மாலை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருப்பு உடை அணிந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு! கருப்புக் கொடியேற்றி இன்றைக்கு காட்டிவிட்டோமா… இது வெறும் டிரெயிலர்தான். மெயின் பிக்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக் கூடாது. தமிழர்களின் ரத்தத்தில் சூடு குறைந்துவிட்டது. தெருவில் இறங்கிப் போராட மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்… மொழிக்காக வீதிகளில் இறங்கியவர்கள்… எங்கள் இனத்தின் உரிமைக்காக இறங்கமாட்டோமா? தமிழர்களுக்காகப் போராட யார் இருக்கிறார்கள் என்று நினைத்தார்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறான். ஆயிரம் எமர்ஜென்சியைப் பார்க்க நான் தயார்.

பிரதமர் மோடி அவர்களே… டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள்… தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம். தென்மாநில மக்களுடைய குரலை மதிக்கமாட்டேன் என்று இருக்கும் ஒன்றிய பாஜவின் கொட்டத்தை அடக்குவோம். மாநிலங்களால் உருவாகியிருக்கும் இந்தியாவில் – மாநிலங்களை நசுக்க வேண்டும் என்று நினைத்தால் கை கட்டி, வாய் பொத்தி, அடிமையாக அடங்கியிருப்போம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் போராட்டக் குணத்தைப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் என்று டெல்லியை நான் எச்சரிக்க விரும்புகிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டிற்கு எதிராகப் பா.ஜவும் – அதற்கு ஜால்ரா போடும் அதிமுகவும் ஏற்படுத்தியிருக்கும் பேராபத்து.

தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க பாஜ போடும் சதி திட்டம்தான், தொகுதி மறுசீரமைப்பு. அதனை வெளிப்படையாக எதிர்ப்பதற்குக்கூட முதுகெலும்பற்ற கூட்டம்தான் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் நேரத்தில், திமுகவின் எம்.பி.க்கள் அனைவரும் பிரசாரத்தில் இருப்பார்கள்; இந்த இடைவெளியில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்று பா.ஜ. நினைத்தது. முதலில், மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தில் தேர்தலுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். நாம் போடும் வாக்குக்கே வேல்யூ இல்லை என்று ஒரு நிலை வரும் என்றால், அதை எதிர்க்க வேண்டாமா? அதனால்தான், நம்முடைய எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நமக்கு கொள்கைதான் முக்கியம். தமிழ்நாட்டு உரிமைகள்தான் முக்கியம். நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னதுதான், எங்களுக்கு பதவி என்பது தோளில் போடும் துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி.

தெற்கு மறுபடியும் தேய வேண்டும் என்று பா.ஜ.க. உருவாக்கியிருக்கும் லேட்டஸ்ட் பிளான்தான், இந்த தொகுதி மறுசீரமைப்பு. தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருப்பது போராட்டம் இல்லை, போர்! போர்கள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை. முதலில் சமூகநீதிப் போர். இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே முதலில் திருத்த வைத்தது தமிழ்நாடுதான். அடுத்து, மொழிப்போர். தாய் கொடுத்த உயிரைத் தாய் மொழிக்குத் தந்து கட்டாய இந்தியை விரட்டிய வீரம் செறிந்த வரலாற்றுக்குச் சொந்த மண், நம்முடைய தமிழ்நாடு. இந்தப் போரில்தான் நேருவின் உறுதிமொழியும் வந்தது, பேரறிஞர் அண்ணாவும் இருமொழிக் கொள்கையை உருவாக்கினார். இப்போது நடப்பது தமிழ்நாட்டின் அரசியல் உரிமைக்கான போர்.

மகளிர் இடஒதுக்கீடு என்று அவர்கள் சொல்வது பம்மாத்து வேலை. உண்மையிலேயே அதுதான் நோக்கம் என்றால், 2023-இல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியபோது, 2029-க்குப் பிறகு என்று சொன்னார்கள்? ஏனென்றால் மகளிர் முன்னேற்றம் இவர்களின் நோக்கம் இல்லை; இவர்களின் நோக்கம் ஆர்.எஸ்.எஸ். விரும்பும் ஒரே நாடு, ஒரே அரசு! அதற்காகத்தான் அரசியல் சட்டத்தைக் காலால் மிதித்து இவ்வளவு அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதை எப்படித் தமிழ்நாடு ஒத்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மனிதர்களும் இன்றைக்கு எதிர்த்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த அநீதிக்கும் ஆதரவாகப் பேசும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர்தான், அரசியல் அவமானமாகப் பார்க்கப்படும் அடிமைசாமி! புரிகிறதா, அடிமைசாமி என்று யாரை சொல்கிறேன் என்று.

இன்றைக்கு நாட்டில் இவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. பழனிசாமி என்ன பேசியிருக்கிறார் என்றால்… டீ-லிமிட்டேஷனால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து வராது என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்காது என அமித் ஷாவே சொல்லிட்டார் என்று பழனிசாமி பேசுகிறார். ஒன்றிய அரசு சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசியிருக்கிறார். அமித் ஷா எங்கே சொன்னார்? தேர்தல் பிரசாரத்தில். நாங்கள் என்ன கேட்டோம்? நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்கிறோம். எங்களுக்குப் பேப்பரில், சட்டபூர்வமாக நாடாளுமன்றத்தில், உறுதிமொழி வேண்டும்! 1971 மக்கள் தொகை அடிப்படையில்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி அளவு இருக்கும் என்கிற உறுதிமொழி வேண்டும்.

தேர்தல் கூட்டத்தில் அமித் ஷா சொன்னதையெல்லாம் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். கூட்டணியில் இருக்கும் பாவத்திற்கு அடிமை பழனிசாமி வேண்டுமானால், அதையெல்லாம் நம்பலாம். தி.மு.க.வோ – தி.மு.க. ஆளும் தமிழ்நாடோ – வேல்யூ இல்லாத உங்களுடைய வெற்று வார்த்தைகளை நம்பாது. பழனிசாமி இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறார்… “ஆபத்து வரும் பின்னே… பழனிசாமியின் லா பாயிண்ட் வரும் முன்னே” என்று, இதனை நாம் எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். தனிமனிதர்களைவிட நமக்கு தமிழ்நாடுதான் பெரிது.

எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.வுக்கு விழும் வாக்குகள் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்.எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவப் பா.ஜவும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* மாநில உரிமைகளில் இரட்டை வேடம் முதல்வராக இருந்தபோது எதிர்ப்பு பிரதமராக இருக்கும்போது ஆதரவு: மோடி மீது கடும் தாக்கு
‘‘நாம் என்ன கேட்கிறோம், கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்க நினைக்காதீர்கள். வரிப்பணத்திற்கு மட்டும்தான் தமிழ்நாடு உங்களுக்குத் தேவையா? பா.ஜ.க.வின் அதிகார திமிரை அடக்கும் காலம் வந்துவிட்டது. தலைவர் கலைஞர் பராசக்தியில் வசனம் எழுதியிருப்பார், இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது என்று எழுதியிருப்பார். அதேபோன்று, நம்முடைய நாடும் எத்தனையோ பிரதமர்களைச் சந்தித்திருக்கிறது! ஆனால் பிரதமர் மோடி அவர்கள் மாதிரி மாநிலங்களை நசுக்கியவர்கள் யாரும் கிடையாது. இத்தனைக்கும் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி வக்கணையாகப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருந்தார். என்னென்ன பேசினார்? ஒன்றிய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 50 விழுக்காட்டைத் தர வேண்டும் என்று சொன்னார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று சொன்னார்.

ஒன்றிய அரசுகளுடைய அதிகாரக் குவிப்பைக் கடுமையாக எதிர்த்தார். இதெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி சொன்னது. ஆனால் இப்போது, மாநில அதிகாரங்களைப் பறித்து ஒன்றியத்தில் குவிக்கிறார். மாநிலங்கள் உரிமையைக் கேட்பது வேப்பங்காயாகக் இப்போது கசக்கிறது. மொத்தத்தில் கூட்டாட்சிக் கருத்தியலையே குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார். முதல்முறையாக மோடி அவர்கள் பிரதமரானபோது நாடாளுமன்றத்துக்கு முன்னால் பவ்யமாக விழுந்து கும்பிடு போட்டார் நம்முடைய பிரதமர், இப்போது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஒரே அடியாகக் கும்பிடு போட வேண்டும் என்று நினைக்கிறார்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Black Flag ,Delhi ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Tamils ,Namakkal ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...