×

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 மசோதாக்கள் அறிமுகம்.! மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது நாளை மாலை வாக்கெடுப்பு

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி-யான ஆர்.ராசா, 3 மசோதாக்களையும் ஒன்றாக கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றாக கொண்டு வர முடியாது, முதலில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும், அதன் பிறகே அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை வர வேண்டும் என்றார்.

இதனிடையே மசோதாக்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உறுதிபட தெரிவித்து உள்ளார். தொகுதி வரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை அறிமுகம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரிவு வாரியான வாக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. முடிவில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கு எதிராக 185 வாக்குகளும், ஆதரவாக 251 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவுடன் சேர்த்து நாளை மாலை 4 மணி வரை (சுமார் 12 மணி நேரம்) விவாதம் நடக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரைறை மசோதா குறித்து பேசிய திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்ப்பதாகவும், அதே நேரம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதாகவும் கூறி உள்ளார். தொகுதி மறுவரையறையை குறுக்குவழியில் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு சாடி உள்ளார்.

தொகுதி மறுவரைறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எரித்துள்ளதாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இந்த மசோதாவை திமுக திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும், ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ரேம் மேக்வால் தாக்கல் செய்தார்.ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அறிமுக நிலையிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக அதிகரிக்க செய்யும் தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கலாகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள சில எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளனர்.

 

Tags : Delhi ,Lok Sabha ,Dimuka M. B-Yana R. Raza ,
× RELATED தொகுதி மறுவரையறை – குறுக்குவழியில்...