×

விரிவாக்கம் செய்யப்படும் குறு தொழில் நிறுவனங்கள் கூடுதல் மானியம் பெறலாம் கலெக்டர் தகவல்


சிவகங்கை, பிப்.23:  குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கூடுதல் மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2008ன் கீழ் மாநிலத்தின் எப்பகுதியிலும் துவங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் முதலீட்டு தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.6.25லட்சம் முதலீட்டு மானியமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 சதவீத அளவிற்கு குறுந்தொழில் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரியினை மானியமாக திரும்ப அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2018ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதின் விளைவாக குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதிப்புக்கூட்டு வரி மானியத்திற்கு ஈடாக 25சதவீதம் முதலீட்டு மானியத்துடன், 10சதவீதம் கூடுதல் மானியம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இத்தகைய கூடுதல் மானிய தொகை ஆண்டொன்றிற்கு 2 சதவீத அளவில் 5ஆண்டுகளுக்கு ரூ.2.50லட்சம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அரசு வழங்கும் இம்மானிய தொகையை பெற்று பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Collector Information ,
× RELATED 9, 10ம் வகுப்பு மாணவிகள் கல்வி...