×

காளையார்கோவில் பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

காளையார்கோவில், பிப்.23: காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெளியூர்களில் அறுவடை செய்த வைக்கோலை விதி மீறி வாகனங்களில் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காளையார்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் சில மாதங்களுக்கு முன்னால் பரவலாக பெய்த மழையால் நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. தற்போது அப்பகுதிகளில் அறுவடை முடிந்து வரும் நிலையில், அறுவடை செய்த வைக்கோலை பிற ஊர்களுக்கு ஏற்றி செல்கின்றனர். லாரிகள் போன்ற பெரிய வாகனங்களுக்கு வாடகைச் செலவு அதிகமாக இருப்பதினால், மினி சரக்கு லாரி, டிராக்டர் போன்ற சிறிய வாகனங்களில் இருபுறமும் அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு மதுரை-தொண்டி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்கின்றனர்.

அப்போது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்புறமாக வரும் வாகனம் தெரிவதில்லை. மேலும் தார்பாய் போட்டு கட்டாமல் செல்வதினால் வைக்கோல் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பது அரிதாக உள்ளநிலையில், இதுபோன்று காற்றில் வைக்கோலை பறக்க விட்டு செல்வது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதிகளவு வைக்கோல் ஏற்றும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

Tags : Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...