- எஃப்சிஆரா
- கிரிஸ்துவர்
- ஐரோப்பிய ஒன்றிய பஹியா
- ஜோசப் விஜய்
- திமுகா
- சென்னை
- யூனியன் பஹியா ஊராட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள எப்சிஆர்ஏ சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்பு கூட நடிகர் ஜோசப் விஜய் காட்டாததால், சிறுபான்மையினரின் வாக்கு வங்கி திமுக பக்கம் சாய்வதாக அரசியல் விமர்ச்சகர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்களின் அதிரடி பிரசாரத்தால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. வாக்குப் பதிவுவுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வெற்றியை தக்கவைக்க அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக, ராமதாஸ்-சசிகலா என 5 முனை போட்டி நிலவி வரும் சூழ்நிலையில், சமூக அமைப்புகள், வணிக அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் என பல அமைப்புகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டு தேர்தல்களில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற விவாதங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலிலும் சிறுபான்மையின வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற விவாதங்கள் அனல் பறந்து வருகிறது.
அந்த வகையில், சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான கரங்களை தேர்ந்தெடுப்பதில் சிறுபான்மையின அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒன்றிய பாஜ அரசின் எப்சிஆர்ஏ சட்ட திருத்தம் சிறுபான்மையின மக்களிடையே கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டு நிதி பெறும் கல்வி, மருத்துவ நிறுவனங்களின் உரிமம் ரத்தானால், அந்த சொத்துக்களை அரசே கையகப்படுத்தும் என்ற சட்டம் சிறுபான்மையினரின் சொத்துக்களை பறிக்கும் முயற்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதோடு, நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டம் கிறிஸ்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வரின் கடுமையான கண்டனங்கள் அவர்களுக்கு ஒரு ஆதரவை தருவதாக உள்ளது. ஆனால், புதிதாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய், கிறிஸ்தவ வாக்குகளை பிரிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதற்காக, இதுவரை வெளியில் தெரியாத விஜய் என்ற தனது பெயருக்கு முன்னால் சான்றிதழில் உள்ள ஜோசப் என்ற பெயருடன் சேர்த்து தேர்தலுக்காக ஜோசப் விஜய் என்று உச்சரித்து வருகிறார்.
இதனால் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பாரா? என்ற கேள்விகள் எழுந்த போது, நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் விஜய் மீதான எதிர்ப்பையே காட்டியுள்ளது. அதுமட்டுல்ல, கிறிஸ்துமஸ் அன்று நாடு முழுவதும் 700 இடங்களில் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர், திராவிடர் கழகத்தினர் என பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டபோது கூட, வெளியே வராமல் வெறும் அறிக்கையோடு நிறுத்திக்கொண்ட விஜயை எப்படி நம்புவது என்பது கிறிஸ்தவ மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள், சிறு அமைப்புகள் ஏற்கனவே திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. கடந்த தேர்தலில் எதிரணியில் இருந்த இஸ்லாமிய கட்சிகள் கூட இம்முறை திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. பிரதான கூட்டணிகளில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் போட்டியிடுவது திமுக கூட்டணியில் தான். அதே போன்று தற்போது கிறிஸ்தவ மக்களின் ஆதரவும் திமுகவுக்கே முழுமையாக கிடைக்கும் என்பது அரசியல் விவாதங்களில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக உள்ளது.
கிறிஸ்தவர்களுக்கான பிரத்யேக நலத்திட்டங்கள், புதிய வாக்குறுதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கக் கூடிய பலம்பொருந்திய கூட்டணி, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிரான திமுக கூட்டணியின் நிலைப்பாடுகள் என கிறிஸ்தவர்கள், இந்த கூட்டணியை ஆதரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. கொள்கை தெளிவற்ற, தீர்க்கமான எதிர்ப்பை பதிவு செய்யாத புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் கட்சியை நம்புவதைவிட, தமிழ்நாட்டளவில் திமுகவையும், இந்திய அளவில் காங்கிரஸையும் ஆதரிக்கவே சிறுபான்மையினர் விரும்புகின்றனர் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதுகுறித்து கிறிஸ்தவ பேராயர் ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டதுடன், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்கும் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தியது. மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும், சிறு வணிகர்களுக்கு குறைந்த வட்டி கடன்களும் வழங்கப்பட்டன.
சிறுபான்மையினர் தொழில் தொடங்க தாம்கோ மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் என்று தற்போது திமுக தனது வாக்குறுதியும் அளித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் மேலும் பல நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. புதிய தேவாலயங்கள் கட்ட அனுமதி பெறும் நடைமுறை எளிதாக்கப்படும். மாணவர்களின் உயர்கல்விக்காக அயலக கல்வி உதவி திட்டம், ஆண்டுதோறும் 25,000 இளைஞர்களுக்கு நவீன தொழில் பயிற்சி போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் வரும் காலங்களில் திமுக செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதால் தான் நாங்கள் திமுகவை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
