×

அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தர்மபுரி, ஏப்.16: தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் கொளுத்தும் வெயிலில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, திமுக வேட்பாளர் சண்முகம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகம், கொளுத்தும் வெயிலில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அரூர் தொகுதியில் தண்டகுப்பம், மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, செக்கம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்கு சேகரித்தார். தமிழக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி, பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஆங்காங்கே கூட்டணி கட்சி நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது வேட்பாளர் சண்முகம் பேசுகையில், ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி வந்த பிறகு, மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது. அரசு பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது. 19 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் காலை உணவுத் திட்டத்தை, 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட பல திட்டங்கள் மக்களுக்காக வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்றார். வாக்கு சேகரிப்பின் போது, அரூர் நகர திமுக முல்லைரவி, விசிக சாக்கன் சர்மா, சிபிஎம் சிசுபாலன், செந்தில்குமார், கொங்கு சூர்யா, தொகுதி பொறுப்பாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, கிருஷ்ணகுமார், ஐடி விங் தமிழழகன் மற்றும் திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Dharmapuri ,Shanmugam Udayasuriyan ,Aroor ,Dharmapuri district ,DMK government ,Separate ,Assembly ,Secular Progressive Alliance… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...