×

ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம்!

அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 15) நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

கம்மரவாரிப்பள்ளி (Kammaravaripalli) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மதியம் 12:30 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வெடிப்பு என கருதப்பட்டது. ஆனால், அந்த வீட்டில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் வெடித்ததே விபத்தின் தீவிரம் அதிகரிக்க காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் தாக்கத்தால் விபத்து நடந்த வீடு உட்பட அருகிலிருந்த 4 வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி விஸ்வநாத ரெட்டி, மகாபுன்னிசா, அஸ்லம் பாஷா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கதிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : explosion ,Andhra Pradesh ,Amaravati ,Sri Sathya Sai district ,
× RELATED நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ:...