குடிநீர் கோரி திருமங்கலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

திருமங்கலம், பிப். 23: திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு கீழபள்ளிவாசல் தெரு. விருதுநகர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 25 தினங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டியுள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 20 தினங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியில்  பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு நேற்று திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த அலுவல ஊழியர்களுடன் குடிநீர் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. பின்னர் அங்கிருந்த குடிநீர் பிரிவு ஊழியர்கள் விரைவில் குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும் எனவும் அதுவரையில் லாரி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதன்பிறகே பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.

Related Stories:

>