×

இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் வடகாடு மலைப்பகுதியில் சுற்றித்திரியும் யானைக்கூட்டம் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம், பிப்.23: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலைக்கிராமங்களில் காட்டு யானை, சிறுத்தைப்புலி, மான், காட்டு எருமை, குரங்கு, செந்நாய், மலைப்பாம்பு உள்பட  பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த யானைகள், விவசாயப் பயிர்களை சேதப்படுத்தின. ரேஷன் கடையையும் நாசம் செய்தன. அத்துடன் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து, அவர்களிடமிருந்து உணவுப் பொருட்களை பறித்து அச்சுறுத்தின. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக சாலையை கடந்து, ரோட்டில் உலா வருகின்றன. மேலும் யானைகள் கூட்டமாக சாலையில் நின்றுகொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின் பேரில், வனச்சரகர் செந்தில், வனவர் மகேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் மலைப்பகுதிக்குச் சென்று, யானைகள் கூட்டமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், எச்சரிக்கையுடன் இருப்பதுடன் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

Tags : Forest Department ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...