×

குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

குன்னூர்: குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ​நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த இந்த யானைக் கூட்டம், ரன்னிமேடு மற்றும் கிளண்டேல் பகுதிகளைக் கடந்து நள்ளிரவில் நான்சச் பகுதிக்குள் நுழைந்தன. அங்குள்ள கூட்டுறவு ரேஷன் கடையின் சுவரை இடித்து யானைகள் சேதப்படுத்தின. தொடர்ந்து உள்ளே இருந்த காலி சாக்குப்பைகளை வெளியே தூக்கி வீசி எறிந்தன.

இருப்பினும், சுவரில் ஏற்பட்ட துளை வழியாக யானைகளால் உள்ளே நுழைய முடியாததால் கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சேதமின்றி தப்பின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர், யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் தடுக்கும் பொருட்டும், அவற்றை பாதுகாப்பாக சமவெளிப் பகுதிகளுக்கு விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்சச் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Coonoor ,Nilgiris ,
× RELATED கொடைக்கானலில் புனித லூர்து அன்னை...