சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்ட உதவிகள் ரத்து

கடலூர்,  பிப். 21: அரசால்  தடை செய்யப்பட்ட  சுருக்குமடி வலையை பயன்படுத்த முயன்றாலோ  அல்லது பயன்படுத்தினாலோ படகுகள்  மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும், என்றும், மீன்வளத்துறை  மூலம் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும்  சட்டத்தின்படி சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது  முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில்  தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கும்  விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  சில மீனவ கிராமத்தினர்கள் சுருக்குமடி வலையை  பயன்படுத்தி மீன்பிடிப்பில்  ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

அரசால் தடை செய்யப்பட்டும் மாவட்ட  நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து  சுருக்குமடி வலையை பயன்படுத்தி  வரும் மீனவ கிராமத்தினர் மற்றும்   சுருக்குமடி மீன்பிடி படகு உரிமையாளர்கள் உடனடியாக சுருக்குமடி வலையை  பயன்படுத்துவதை  நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின்  வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல்  வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால  வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  எடுக்கப்படும் சுருக்குமடி தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து,   கடலூர் மாவட்ட கடல் பகுதியிலும் மீனவ கிராம பகுதிகளிலும்  சட்டம் ஒழுங்கு  பிரச்னை ஏற்படாமல்  அரசால் அனுமதிக்கப்பட்ட சுமூகமான  மீன்பிடிப்பு  முறைகளை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த அறிவுரைகளை  மீறி யாரேனும்  கடலூர் மாவட்ட கடல் பகுதியில் அரசால்  தடை செய்யப்பட்ட  சுருக்குமடி வலையை பயன்படுத்த முயன்றாலோ  அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக   தமிழ்நாடு கடல்  மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி படகுகள்  மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் மீன்பிடிப்பில் ஈடுபடும்   மீனவர்கள் மீது  உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மீன்வளத்துறை  மூலம் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>