- அஇஅதிமுக
- எச்.ராஜா
- அண்ணாமலை
- பாஜக
- முதல் அமைச்சர்
- திருமாவளவன்
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- விக்கிரவாண்டி
- Mayilam
- Vanur
விழுப்புரம், ஏப். 13: அதிமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு எச்.ராஜா, அண்ணாமலையை பாஜ முதல்வராக்கி விடும் என விழுப்புரம் பிரசாரத்தில் திருமாவளவன் ஆதங்கத்துடன் பேசினார். விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, மயிலம், வானூர் உள்ளிட்ட தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பாஜகவை தோளில் சுமந்துவரும் பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
தமிழகத்தில் பாஜ ஆட்சி வேரூன்ற பழனிசாமி துணைபோகிறார். தமிழகத்தில் தப்பித் தவறி அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியாது. பாஜ எச்.ராஜாதான் முதல்வராக வருவார். இரட்டை இலைக்கு வாக்களித்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாக்களித்ததாகிவிடும். இரட்டைஇலை இவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையில் ஒருவர் வெற்றிபெறுகிறார் என்றால், பாஜக வளர்வதற்கு அல்லது ஆட்சி அமைப்பதற்கு வழி வகுத்துவிடும்.
திமுக கூட்டணி நமக்கு 2 இடங்களை தந்து, நமது வெற்றிக்கு அவர்களும் பாடுபட்டதால்தான் நமக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாஜகவுடன் சேர்ந்துவரும் ஒவ்வொரு கட்சிக்கும் நாம் பாடம் புகட்டியாக வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ஆட்டத்தை கலைத்து ஆடி, எச்.ராஜா அல்லது அண்ணாமலையை முதல்வராக்கி விடக்கூடும்.
100 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று விட்டாலே தமிழக அரசியலை தலைகீழாக பாஜ புரட்டி போட்டுவிடும். அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜகதான் என்பதை அக்கட்சி தொண்டர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக மதச்சார்பற்ற அணிகளுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
