×

மறுமணத்திற்காக மேட்ரிமோனியலில் பதிவு செய்த பெண்ணிடம் ரூ.10 லட்சம் அபேஸ்: பலே ஆசாமி கைது

சென்னை: மறுமணத்திற்காக பிரபல மேட்ரிமோனியலில் பதிவு செய்த பெணிடம் ரூ.10 லட்சம் ஏமாற்றிய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டையை சேர்ந்த 40 வயது பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை இருக்கும் நிலையில், 9 மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தேன். பின்னர், மறு மணத்திற்காக பிரபல மேட்ரிமோனியலில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

அதை பார்த்து என்னை தொடர்புகொண்ட மனோகரன் என்பவர், ஆந்திர மாநிலத்தில் வசித்து வருவதாகவும், தானும் விவாகரத்து பெற்றவர் என்றும், சொந்த தொழிலில் மாதம் ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டுவதாகவும் தெரிவித்தார். அதை நம்பி மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டோம். பின்னர், எனக்கு புதிய செல்போன் உட்பட பல பரிசு பொருட்களை வாங்கி கொடுத்தார். மறு மணத்திற்கு பிறகு என்னை அன்பாக கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தார்.  இந்நிலையில், ஒரு நாள் என்னை செல்போனில் தொடர்புகொண்டவர், விபத்தில் சிக்கியதாகவும், மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுதாகவும் கூறினார்.

வருங்கால கணவர் என்பதால், அவரது வங்கி கணக்கில் பல தவணையாக ரூ.10 லட்சம் வரை செலுத்தினேன். சில நாட்களுக்கு பிறகு அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் மேட்ரிமோனியலில் கொடுத்திருந்த முகவரியை பெற்று விசாரித்தபோது, அது போலியானது என தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும், என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த மனோகரன் (45), பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருவதும், பணம் சம்பாதிக்கும் ஆசையில், இவ்வாறு பல பெண்களை தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஐதராபாத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Tags : Pale Asami ,
× RELATED ஆன்லைன் வர்த்தகம் மூலம் கார் விற்பதாக பண மோசடி: பலே ஆசாமி கைது