×

பரமக்குடியில் 5 கி.மீ நடந்து மக்களிடம் வாக்கு சேகரிப்பு: தோல்வி, விரக்தி பயத்தில் விமர்சிக்கிறார் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சிவகங்கை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூர் அருகே வைரவன்பட்டியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு சென்று தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று காலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நடைபயணமாக பரமக்குடி பஸ் நிலையம் ஆர்ச் பகுதி, காந்தி சிலை, பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் கூடியிருந்த தொண்டர்களையும், பொதுமக்களையும், வியாபாரிகளையும் சந்தித்து திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் கை கொடுத்து உற்சாகமாக உரையாடினர். அங்கு உள்ள தேநீர் கடையில் டீ அருந்தினார். அதன் பின்பு பெரிய கடை வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் பகுதியில் உள்ள பெண்கள் காய்கறி வியாபாரிகள், மீன் கடை வியாபாரிகள், தெருவோர கடை வியாபாரிகளை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதல்வர் திரும்பும் வழியில், தூய்மை பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, `‘உங்களுக்கு அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா? காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுகிறதா’’ என கேட்டறிந்தார். அவர்களும் ‘கிடைக்கிறது சார்’ என்றனர். மேலும், தூய்மை பணியாளர்களிடம் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். சுமார் 5 கிலோ மீட்டர் நடந்த முதல்வர், எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நடைபயிற்சியை நிறைவு செய்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை செய்தியாளர்களை சந்தித்தனர். அவரிடம் நிருபர்கள், ‘‘எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது வருகிறாரே…’’ என்றனர்.

அதற்கு முதல்வர், `‘எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில், விரக்தியில் திமுக குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்’’ என்றார். ‘‘ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆகியுள்ளதே’’ என்ற கேள்விக்கு, `‘நோ கமெண்ட்ஸ்’’ என்றார். ‘‘அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தீர்களா’’ என்ற கேள்விக்கு, ‘`அதனை நான் படிக்கவில்லை’’ என்றார் முதல்வர்.

‘‘முன்பு திமுக – அதிமுக இடையேதான் போட்டி என்று கூறுவீர்கள். தற்போது, தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையேதான் போட்டி என கூறுகிறீர்களே’’ என கேட்டபோது, `‘தற்போது அதிமுகவிற்கு தலைமை என்பது இல்லை. அக்கட்சி டெல்லி பாஜ கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக என்ற முகமூடியை அணிந்துகொண்டு பாஜ தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது.

இதனால்தான் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடையே போட்டி என்று கூறுகிறேன்’’ என்றார் முதல்வர். ‘‘தேர்தல் ஆணையம் தொடர்ந்து தமிழக உயர் அதிகாரிகளை மாற்றுகிறதே’’ என்ற கேள்விக்கு, `‘இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளேன். மேலும், தேர்தல் ஆணையத்தில் டிஆர்.பாலு புகார் அளித்துள்ளார்’’ என்றார். பின்னர் முதல்வர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

* நெசவு நெய்த முதல்வர்
நடைப்பயிற்சியின்போது சர்வீஸ் சாலை வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எமனேஸ்வரம் வந்தார். அங்குள்ள ஒரு நெசவாளரின் வீட்டிற்குச் சென்று குறைகளை கேட்டு நெசவு செய்யும் தறியில் அமர்ந்து சிறிது நேரம் நெசவு செய்தார். நெசவாளர் அன்புடன் அளித்த தேநீரை அருந்தினார். இட்லி சாப்பிடும்படியும் குடும்பத்தினர் கேட்டனர். அதற்கு இதுவே போதும் என்று கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த நெசவாளர்களும், பொதுமக்களும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரமக்குடியில் நெசவாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், ‘‘மீனவர்களுக்கு தடைகாலங்களில் கொடுக்கும் நிவாரணத்தை போல நெசவாளர்களுக்கு வழங்கவேண்டும். மழை காலங்களில் பாவு விரிக்க முடியாததால், நெசவு தொழில் பாதிப்பு அடைந்து விடும். இதனால் மழைக்காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், ‘‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், உடனடியாக உங்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்’’ என கூறினார்.

* குழந்தையிடம் கொஞ்சல் மீன் வியாபாரியிடம் பேச்சு
பரமக்குடியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, தனது தந்தையிடம் இருந்த குழந்தை முதல்வரை பார்த்து கை அசைத்ததால், மகிழ்ச்சி அடைந்த முதல்வர் அந்த குழந்தையை வாங்கி கொஞ்சினார். சாலை ஓரத்தில் மாற்றுத்திறனாளி இருசக்கர வாகனத்தில் நிற்பதை பார்த்து அவரிடம் சென்று, நலம் விசாரித்தார். மீன் வியாபாரியிடம், ‘‘இது எந்த வகை மீன்? எவ்வளவு விலை’’ என விசாரித்தவர், அவரின் குடும்பத்தை பற்றியும் விசாரித்து உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு கேட்டார்.

Tags : Paramakudi ,Edappadi ,Chief Minister ,M.K. Stalin ,Vairavanpatti ,Tiruputhur ,DMK ,Sivaganga district ,Ramanathapuram district ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...