×

முதல்வர் மீது தாக்குதல் மேலநீலிதநல்லூர் கல்லூரி காலவரையின்றி மூடல் இரு தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு

நெல்லை, பிப்.21:  சங்கரன்கோவில் அருகே கல்லூரி முதல்வர் தாக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உதவி போராசிரியராக பணியாற்றிய சிவக்குமார் கடந்த ஆண்டு டிச.18ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், மீண்டும் பணியில் சேர கடந்த பிப்.16ம் தேதி வந்த போது, கல்லூரி தரப்பில் சஸ்பெண்ட் காலம் முடியவில்லை என கூறியதால் கையெழுத்து போட்டு விட்டு சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் பிப்.17ம் தேதி மீண்டும் சிவக்குமார் கல்லூரிக்கு வந்த நிலையில் அவரது ஆதரவு மாணவர்கள், சிவக்குமாரை பணியில் சேர நிர்வாகம் தடுத்ததை கண்டித்து முதல்வரிடம் தகராறில் ஈடுபட்டதாக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் முதல்வர் ஹரிகெங்காராம், தன்னை மாணவர்கள் தாக்கியதாக கூறி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கல்லூரி முதல்வர், மாணவர்கள் தன்னை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து பலமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் மாணவர்கள் மாடசாமி,  முப்புடாதி, கனகராஜ், மதன், முத்துராமலிங்கம், முத்துராம்கோபி, லெனின்குமார், பாலமுருகன், அஜித்குமார், பார்த்திபன் ஆகிய 11 பேர் மீதும், மாணவர்களை தகராறு செய்ய தூண்டியதாக உதவி பேராசிரியர் சிவக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் தூண்டுதலின் பேரில் முதல்வர், தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாணவர் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம், கல்லூரி செயலாளர் ரமாதேவி, தலைவர் பிரபு ரஞ்சித் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து மறுஅறிவிப்பு வரும் வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Melanilithanallur College ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...