×

அறநிலையத்துறை குறித்து அவதூறு பேச்சு; எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு: வேப்பேரி போலீசார் அதிரடி

 

 

சென்னை: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராஜ்மோகன் கோயில் வளாகத்தில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை எழும்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்மோகன், சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் வளாகத்திற்குள் சென்றார். அங்கு கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டு, யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு அதிகாரிகளையும், குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும், அப்பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறான கருத்துக்களை அவர் தெரிவித்தார். இதனை வீடியோவாகப் பதிவு செய்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பாக சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தனர். கோயில் என்பது ஆன்மீக வழிபாட்டுத் தலம் மட்டுமே தவிர, அங்கு அரசியல் ரீதியாக அரசுத் துறைகளையும், அதிகாரிகளையும் அவதூறாகப் பேசுவது சட்டப்படி குற்றம் எனச் சுட்டிக்காட்டி, சூளை அங்காளம்மன் கோயிலின் செயல் அலுவலர் கங்காதேவி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்று தீவிர விசாரணை நடத்திய வேப்பேரி போலீசார், மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, எழும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்மோகன், பகுதி செயலாளர் ஓட்டேரி நந்தா மற்றும் சமீபத்தில் கட்சியில் இணைந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் கோயில் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறு பரப்பியதாகக் கூறி, சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், ஆபாசமாகப் பேசுதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கோயில் வளாகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக அரசுத் துறைகளையும் அதிகாரிகளையும் அவதூறாகப் பேசிய புகாரில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Foundation Department ,Rampur Taweka ,Rajmohan ,Chennai ,Tamil Victory Club ,Rajmohan Temple ,Tamil ,Nadu ,Legislature ,Tamil Nadu Victory Corporation ,Ramampur ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...