×

50 ஆண்டுகளாக மனிதர்கள் செல்லாத நிலையில் நிலவுக்கு சென்று பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: புதிய யுகம் தொடங்கியுள்ளதாக ‘நாசா’ அறிவிப்பு

 

வாஷிங்டன்: நிலவைச் சுற்றி ஆய்வு செய்யும் வரலாற்றுச் சாதனை பயணத்தை முடித்துக் கொண்டு 4 விண்வெளி வீரர்கள் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் யாரும் நிலவுக்குச் செல்லாத நிலையில், அந்த சாதனையை முறியடிக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆர்டெமிஸ் 2 என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இதற்கு முன்னதாக 1970ம் ஆண்டில் அப்பல்லோ 13 விண்கலம் பூமியில் இருந்து 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல் தூரம் வரை சென்றதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் சென்ற வீரர்கள் அந்த பழைய சாதனையை முறியடித்து இன்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் நிலவின் மறுபக்கத்திற்குச் சென்று, பூமியில் இருந்து சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 756 மைல் தொலைவு வரை பயணித்தனர். மனித வரலாற்றில் விண்வெளியில் இவ்வளவு தூரம் யாரும் சென்றதில்லை. மேலும், விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தையும் இவர்கள் கண்டு ரசித்தனர். இந்த வரலாற்றுப் பயணத்தில் நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜெரமி ஹேன்சன் ஆகிய 4 வீரர்கள் ஈடுபட்டனர். இவர்கள் பயணித்த ஓரியன் விண்கலம் இன்று பசிபிக் கடலில் பாதுகாப்பாக வந்து இறங்கியது.

பூமிக்குள் நுழைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகளை தட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். கடலில் இறங்கிய விண்கலத்தையும், அதில் இருந்த வீரர்களையும் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஜான் பி முர்தா கப்பல் மீட்டது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் கூறுகையில், ‘இந்த வீரர்கள் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் மூலம் புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளனர்’ என்று பாராட்டினார். எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்வதற்கான முக்கியமான சோதனையாக இந்த பயணம் அமைந்தது.

விண்கலத்தின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 5 முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய யுகம் தொடங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Tags : Earth ,NASA ,Washington ,
× RELATED தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்ச...