×

பெங்களூரு – மும்பை வழித்தடத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை துவக்க ஒப்புதல்.!!

பெங்களூரு – மும்பை வழித்தடத்தில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் (Vande Bharat Sleeper) சேவையை தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கொல்கத்தா – கவுகாத்தி வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவைக்குப் பிறகு, வந்தே பாரத் ஸ்லீப்பர் வசதி கொண்ட இரண்டாவது ரயில் வழித்தடமாக இது அமையும். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெங்களூரு மத்திய மக்களவை உறுப்பினர் பி.சி. மோகனுக்கு பெங்களூரு – மும்பை வழித்தடத்திற்கான ஒப்புதல் குறித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் “கே.எஸ்.ஆர் பெங்களூரு மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் (டி) ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவையைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்,” என்று அமைச்சர் கூறி இருக்கிறார்.

ஒன்றிய ரயில்வே அமைச்சர் எழுதிய இந்தக் கடிதத்தை, மோகன் தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து உள்ளார். பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களின் சார்பாக, இணைப்பு வசதியையும் பொதுமக்களின் சௌகரியத்தையும் மேம்படுத்தும் வகையில், பெங்களூரு – மும்பை வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ​​மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையிலான பயண தொலைவைக் கடக்க ரயில்களில் குறைந்தது 20 மணி நேரமாகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை சுமார் 15 மணி நேரத்தில் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு – மும்பை வழித்தடத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் தொடக்க விழா தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நீண்ட தூர பயண இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய ரயில்வே 2026 ஜனவரி மாதம் வந்தே பாரத் படுக்கை வசதி சேவையை அறிமுகப்படுத்தியது. இச்சேவை தொடங்கப்பட்ட முதல் மூன்று மாதங்களிலேயே, 119 பயணங்களின் வாயிலாக சுமார் 1.21 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. இது, உயர்தர இரவு நேர ரயில் பயணங்களுக்கான வலுவான தேவையையும், பயணிகள் மத்தியில் அதிகரித்து வரும் நம்பிக்கையைகாட்டுகிறது,” என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. வந்தே பாரத் வரிசையில் ‘சேர் கார்’ (Chair Car) மற்றும் ‘வந்தே மெட்ரோ’ ஆகியவற்றைத் தொடர்ந்து, ‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்’ மூன்றாவது வகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vande ,Bengaluru - Mumbai ,Union Railway Ministry ,Kolkata ,Guwahati ,Vande… ,
× RELATED கேரளத்தில் 44 தொகுதிகளில் 80% மேல்...