×

நெல்லை டயோசீசன் 2ம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தது

கேடிசி நகர், பிப். 21: நெல்லை டயோசீசன் நிர்வாகிகள் தேர்தல்  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.  இதனிடையே தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருவதால் நீதிமன்றத்தால்  ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் நிர்வாகிகள் டயோசீசன் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டயோசீசன் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக கடந்த 7ம்தேதி டயோசீசன் பெருமன்ற உறுப்பினர்களுக்கான திருமண்டலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட சேகரங்களில் நடந்தது. இதில் ‘லே ’ செயலர் பதவிக்கு முன்னாள் ‘லே’ செயலர் வேதநாயகம் தலைமையில் ஒரு அணியினரும், தொழிலதிபர் ஜெயசிங் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் மேற்பார்யைாளர்கள் தேர்தலை நடத்தினர். இதில் சுமார் 272க்கும் மேற்பட்ட பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2ம் கட்டமாக சேகர மன்ற மற்றும் சபை மன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல் சேகரங்களில் நேற்று (20ம் தேதி) காலை நடந்தது. இதில் சேகர செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில்  நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 13ல் ‘லே’ செயலர் தேர்தல் நடக்கிறது. 2ம் கட்ட தேர்தலையொட்டி பேராலயம் உள்ளிட்ட அனைத்துத் தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Nio Diocesan election ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...