மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் ஏக்கருக்கு 21 மூட்டை மகசூல்

குமாரபாளையம், பிப்.21: குமாரபாளையத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி, ஏக்கருக்கு 21 மூட்டை மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து விவசாயி அசத்தியுள்ளார். பள்ளிபாளையம் வட்டாரத்தில் நடப்பாண்டு 12 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டது. இதில் 10 சதவீத விவசாயிகள் மட்டுமே, பஞ்சகாவ்யா போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தினர். நெல் பயிரில் இந்த ஆண்டு பரவலாக பூச்சி தாக்குதல் இருந்தது. ரசாயன உரங்கள் தெளித்தும், பூச்சி தாக்குதலால் மகசூல் குறைந்தது. இந்நிலையில், குமாரபாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார், தனது வயலில் மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை பயிரிட்டார். நடவு செய்த நாளில் இருந்தே இயற்கை உரம், பஞ்சகாவ்யா போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தினார். இவரது வயலில் நெல் பழநோயும், குலைநோயும் ஏற்பட்டது. இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்திய போதிலும், நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. தற்போது அறுவடை முடிந்த நிலையில், ஏக்கருக்கு 21 மூட்டை நெல் விளைந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாப்பிள்ளை சம்பா ரகம், நோய் தாக்குதலை சமாளித்து நன்றாக வளர்ந்தது. ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நெல் பழநோய், குலைநோய் தாக்குதலால் மகசூல் குறைந்தது. ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்த மற்ற விவசாயிகளின் மகசூலும், இதே அளவு தான் இருந்துள்ளது. ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து செலவுகளுடன் கணக்கிட்டால், இயற்கை விவசாயத்திற்கான செலவு மிகவும் குறைவு. எனவே, பெரிய அளவுக்கு லாபம் இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு நஷ்டம் ஏற்படவில்லை,’ என்றார்.

Related Stories:

>