×

குமரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் முடிந்து 1 மாதம் கழித்து இலவச வேட்டி, சேலை விநியோகம் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்


நாகர்கோவில், பிப்.21: பொங்கல் பண்டிகையையொட்டி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு  வேட்டி, அங்கவஸ்தரம் அல்லது சேலை மற்றும் பச்சரிசி, சிறுபருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவித்தப்படி வேட்டி, சேலை வழங்கவில்லை. பெரும்பாலான மாவட்டங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட வில்லை. இதனால் வேட்டி, சேலை மற்றொரு நாள் வழங்கப்படும் என அறிவித்தனர்.

அதன்படி பொங்கல் முடிந்து ஒரு மாதம் கழித்து, தற்போது தான் வேட்டி, சேலை விநியோகம் தொடங்கி உள்ளது. நாகர்கோவில் கோணம் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் இவை விநியோகம் செய்யப்படுகின்றன. கோணத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் வேட்டி, சேலை வாங்க நேற்றும் ஏராளமானவர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று ஆண்கள், பெண்கள் வேட்டி, சேலை வாங்கி சென்றனர். வேட்டி, சேலை இருப்பு இருக்கும் வரை விநியோகம் செய்யப்படும். பின்னர் மீண்டும் வந்ததுடன் விநியோகம் செய்வோம்.  பொங்கல் பொருட்கள் பெற்ற அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும். எனவே தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் கூறினர். தேர்தல் தேதி அறிவித்து விட்டால் தர மாட்டார்கள் என்ற சந்தேகமும் தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது.

Tags : Kumari ,Pongal ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து