×

சொன்னாரு..! செஞ்சாரு..!! போதை மீட்பு சிகிச்சை மையங்கள்

சொன்னாரு: தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என 2024-25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: போதைப்பொருள் பயன்பாடு என்பது தனி மனிதனின் ஆரோக்கியத்திற்கும், மனநலம், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுப்பதில் மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்க அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.15.81 கோடி செலவில் “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

அதன்படி 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர் என 6 மனநல மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படுகிறது. இந்த மையம் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். இந்த மையங்கள் மருத்துவகல்லூரிகளுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளதால் அவசர மருத்துவ சேவையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உடனடி அவசர மருத்துவ சிகிச்சையும், சி.டி, எக்ஸ்ரே மற்றும் ஆய்வக பரிசோதனைகள், இணை நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை ஆகிய சிகிச்சைகளும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிறது. இச்சேவைகள் அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு தத்தளிப்பவர்கள், மீண்டு வர கலங்கரை மையத்தை அணுகி பயன்பெற்று வருகின்றனர்.

 

Tags : Centenario ,Addiction Recovery Treatment Centers ,Tamil Nadu Budget ,Integrated Drug Recovery and Rehabilitation Centres ,Tamil Nadu ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...